இத்தாலியில் 10,000 பேர் பலி! கன்னியாகுமரியில் சிறப்பு வார்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!!
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒவ்வொரு நாடுகளிலும் உயிரிழப்பு தினமும் அதிகரித்து வருகிறது. சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது இத்தாலி நாட்டில் உச்சகட்ட உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இத்தாலியில் 10,023 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.மேலும் 92,472 பேர் பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் 144 தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்திய பிரதமர் மோடி கொரோனா பாதிப்பை தடுக்க மக்களிடம் தாராள நிதி கேட்ட நிலையில், பல்வேறு நிறுவனங்கள், சினிமா பிரபல நடிகர், நடிகைகள் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். தேசிய ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட பின்னர், தமிழகத்தின் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு கொரோனா மருத்துவ வார்டுகள் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களிடையே தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறுது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் நேற்று மட்டும் 3 பேர் இறந்தனர். இதனையடுத்து இன்றும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு வாரத்தில் நாகர்கோவில் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது.
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,62,967 நபர்களாக உயர்ந்துள்ளது.