புலியை தாக்கிய கொரோனா.! உயிரியல் பூங்காவில் பரிசோதனை நடத்தியதில் தொற்று உறுதி!
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் வசித்து வரும் புலிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
சீனாவில் உருவான கொரோனாதொற்று 199 நாடுகளுக்கு வேகமாக பரவி உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் முழுவதும் 11 லட்சம் பேரை பாதித்துள்ள கொரோனா இதுவரை 69 ஆயிரம் மனிதர்களை பலிவாங்கியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 12,72,848 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் அதிகபட்ச தொற்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 9,618 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,36,830 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மனிதர்களை மட்டுமே பாதித்து வந்த கொரோனா தற்போது புலியையும் விட்டுவைக்கவில்லை. அமெரிக்க உயிரியல் பூங்காவில் முதல்முறையாக ஒரு புலிக்கு கொரோனா இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது.
அமெரிக்க நியூயார்க் பகுதியில் அமைந்துள்ள பிராங்க்ஸ் என்ற உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு புலிக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அங்குள்ள 6 புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. மனிதர்களுக்கு மட்டுமே வந்த கொரோனா தொற்று விலங்குகளுக்கு எப்படி பரவியது? என்கிற கேள்வியும் முன்னெழுந்த நிலையில், பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் மூலமாக விலங்குகளுக்கு பரவி இருக்கலாம் என்றும் பதில் வந்துள்ளது.
மனித இனத்தை மட்டுமே பாதித்து வந்த கொரோனா தற்போது விலங்குகளையும் பாதிக்க தொடங்கிய சம்பவம் மக்களிடையே அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.