தனது ஒருமாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்த மக்கள் காவலர் மயில்வாகனன்.!! பொதுமக்கள் பாராட்டு..!!
கொரோனா நிவாரண நிதியாக தனது ஒருமாத ஊதியமான ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 572 ரூபாயை (1,14,572 ரூபாய்) மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு அதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கொரோனா நிவாரண நிதி அளிக்குமாறு கேட்டிருந்தார்.
இதனையடுத்து தனியார் நிறுவனங்கள், சினிமா திரைப்பட நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண நிதி அளிக்கப்பட்டு வருகிறது. சிலர் பணமாகவும், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருளாகவும் உதவி வருகின்றனர். மேலும் முகக்கவசம் உள்ளிட்ட அவசிய பொருட்களையும் இலவசமாக வழங்கி வருகின்றனர். கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் முக்கிய பங்கு வகித்து தீவிர பணியாற்றி வருகின்றனர்.
அரசின் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை பிடித்து நல்வழியில் அறிவுரை கூறுவது, வாகன ஓட்டிகளை எச்சரிப்பது, எந்த வரையறையும் இல்லாமல் சட்டத்தை மீறி செயல்படுபவர்களுக்கு நூதன தண்டனை மற்றும் வழக்கு உள்ளிட்ட தீவிர கண்காணிப்பு பணியில் தமிழக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில் தனது காவல் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை நிவாரண நிதியாக தனது ஒருமாத சம்பளம் 1.14 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்களிடம் வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் முன்பு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்களிடம் நட்பான முறையில் பேசி கலவரம், வன்முறை மற்றும் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியான வழியில் சிறப்பாக கொண்டு சென்றதும் இதே காவல் அதிகாரி மயில்வாகனன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.