மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட வேண்டாம்! – தமிழக அரசு அறிவிப்பு
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடனாக வாங்கிய தொகையை தவணையாக செலுத்தி வந்த நிலையில், இனி 3 மாதங்கள் இஎம்ஐ தொகையை வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடெங்கும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருவதால் அனைத்து வகையான தொழிலாளர்கள் மற்றும் கூலிப் பணியாளர்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் தமிழக அரசும், ரிசர்வ் வங்கியும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
அடுத்த 3 மாதங்களுக்கான இஎம்ஐ தவணை மற்றும் வட்டி ஆகியவை வங்கிகள் மூலமாக வசூலிக்கப்படாது என்று தெரிவித்தார். ரிசர்ச் வங்கியின் உத்தரவின் அடிப்படையில் அந்தந்த வங்கிகளின் இணையபக்கத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது.
மேலும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தவணை முறையில் கடன் வசூலிக்கும் பிற நிறுவனங்களும் மூன்று மாதங்களுக்கு கடன் தொகையை வசூலிக்க வேண்டாம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. கொரோனா பாதிப்பால் வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு தமிழக அரசின் அறிவிப்பு சற்று ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளது.