மத்திய அரசு தன் முடிவை மாற்ற வேண்டும்! இல்லையேல் போராட்டம் வெடிக்கும்! இந்தியன் வங்கி சம்மேளனம் எச்சரிக்கை!
மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் இல்லையென்றால் ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டியிருக்கும் என்று இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் கூறியதாவது; கொரோனா தொற்று தடுப்பு காரணமாக ஊடரங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முழு அடைப்பு ஏற்பட்டு விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கோடிக்கணக்கான தினக்கூலிகள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். பல லட்சம் தொழிலாளர்கள் சம்பளம் இழப்பு, வேலையிழப்பு போன்ற கொடுமைகளை சந்தித்து வருகின்றனர். இவர்களுக்கான உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும் சிறுகுறு தொழில்கள் மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. இதனை மீட்டெடுக்கவும் தொழிலாளர்கள் நலனை பாதுகாக்கவும் மத்திய அரசு பலவேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிலையை எதிர்கொள்ள நாட்டின் செல்வாதாரங்களை சுரண்டி கொடுத்துள்ள கார்ப்பரேட் நிறுவனம் ஆகியவற்றிடம் கூடுதல் வரி வசூலிக்க வேண்டும். அதைவிடுத்து அரசாங்க ஊழியர்களுக்கும், ஓய்வூதிய நபர்களுக்கும் 18 மாத கால பஞ்சப்படி வெட்டு என்கிற மத்திய அரசின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது.
ஏற்கனவே இக்கட்டான சூழலில் பணியாற்றி வரும் அரசு பணியாளர்களின் பஞ்சப்படி வெட்டு என்ற மத்திய அரசின் அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். இதனை மறுபரிசீலனை செய்யவில்லை என்றால் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் இறங்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.