நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதல்வர் பாராட்டு! கொரோனா பாதிப்பிற்கு உதவுமாறு மற்ற நடிகர்களுக்கு வேண்டுகோள்.!!

Photo of author

By Jayachandiran

நடிகர் விஜய்க்கு புதுச்சேரி முதல்வர் பாராட்டு! கொரோனா பாதிப்பிற்கு உதவுமாறு மற்ற நடிகர்களுக்கு வேண்டுகோள்.!!

கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் பெரிதும் பாதித்து வருவதால், நிதியுதவி அளித்த நடிகர் விஜய்க்கு நன்றி கூறியதோடு, மேலும் திரையுலகினர் கொரோனா நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.

இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவால் பலர் அத்தியாவசிய தேவைகளுக்கே சிரமப்பட்டு வருகின்றனர். சமூகத்தில் தொடர்ந்து பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளி, வீட்டில் தனிமையுடன் இருத்தல், அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தல், ஆபத்து இருப்பதாக உணர்ந்தால் மருத்துவ மேலும் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதனால் வேலையின்றி தினக்கூலிகள், ஒப்பந்த பணியாளர்கள், அமைப்புசாரா ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் தினசரி உணவுக்கே தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் சினிமா பிரபலங்களும் பொதுமக்களும் முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரணநிதிக்கு பணம் உதவியும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.30 கோடி வழங்கி இருந்தார். அந்த நிதியில் 5 லட்சம் புதுவை மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தார். இதைக்கவனித்த புதுவை முதல்வர் நாராயணசாமி நடிகர் விஜய்க்கு வீடியோ மூலமாக நன்றி கூறியதோடு, மற்ற திரையுலக நடிகர்கள் கொரோனா பாதிப்பு பணிக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.