கொரோனா பாதிப்பை தடுக்க மேலும் ஊரடங்கு நீட்டிப்பு! தெலுங்கானா முதல்வர் அதிரடி நடவடிக்கை!
தெலுங்கானா மாநிலத்தில் வருகிற மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் மே 3 தேதியில் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் வைரஸ் தொற்றின் தீவிரத்தை தடுக்க மேலும் 14 நாட்கள் நீட்டிப்பதாக மோடி அறிவித்தார். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் அமைச்சரவை கூட்டத்தின் ஆலோசனைக்கு பின் ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில அரசு முடிவு செய்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் முதல்வர் சந்திரசேகரராவ் கூறியிருப்பதாவது ; தெலுங்கானாவில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை 1,096 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அன்றைய ஒரே நாளில் 43 பேர் வைரஸ் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியது தெலுங்கானா மாநிலம்தான். இதனை ஏற்று இந்திய பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தார். தெலுங்கானாவில் மூன்று மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாக இருந்து வருகிறது. இம்மூன்று மாவட்டங்களிலும் ஊரடங்கு தளர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆரஞ்சு மண்டலங்களில் ஓரளவு தளர்வு இருக்கும். மதுவிற்பனையில் 16 சதவீத விலை உயர்வு இருக்கும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மதுபானக்கடை திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வருகிற மே 29 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகவும், பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.