இந்திய பிரதமர் மோடி தலைமையேற்ற அரசு இரண்டாவது முறையாக பதவியேற்றதை கொண்டாடும் விதமாக சவுராஷ்டிரா மற்றும் மத்திய குஜராத்தில் மெய்நிகர் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது; கடந்த ஆண்டு வரை கொரோனா வைரஸ் பற்றி யாரும் அறிந்திருக்கமாட்டார்கள்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி கேரளாவில் ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே நடந்த ஒவ்வொரு அமைச்சரவை கூட்டத்தின் போதும், கொரோனா தீவிரமான அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் உலக நாடுகளுக்கு பரவ வாய்ப்புள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். அதனை சமாளிப்பதற்கு தேவையான மருத்துவ ஏற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொண்டார். இதுதான் தன் நாட்டு மக்களை நேசிக்கும் ஒரு தலைமையின் அடையாளமாகும்’ என்று அவர் பேசினார். கொரோனா பாதிப்பு பற்றி முன்பே தெரிந்திருந்தாலும் ஏன் ஊரடங்கை தாமதமாக அமல்படுத்தினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.