கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை அசைத்து பார்த்துவிட்டது. இதனால் பல்வேறு துறைகள் வணிக, வியாபார ரீதியாக பல இழப்புகளை சந்தித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக வாகனத்துறை பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. கோடிக்கணக்கான வருமான இழப்பினால் தனது நிறுவன ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்வதில் பல்வேறு ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டை தலைமை இடமாக கொண்ட பிரபல பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளைகளை கொண்ட நிறுவனமாகும். தற்போது கொரோனா தாக்கத்தின் காரணமாக விற்பனை இல்லாமல் பிஎம்டபிள்யூ நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அதில் பணிபுரியும் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த வருட இறுதியில் பணிநீக்கம் செய்யப்படுவதோடு, தானியங்கி கார் உருவாக்கும் பணியையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. பணி நீக்கம் செய்யும் நிறுவனத்தின் முடிவு ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.