டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவின் பயன்பாட்டிற்கும் விரைவில் கொண்டு வரப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது பிரிட்டனிலும் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேக்கா ஆகியன இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி நம் நாட்டிலும் கொண்டு வரப்பட உள்ளது.
இதை தயாரிக்கும் சீரம் நிறுவனம் இந்தியாவிலும் போர்க்கால அடிப்படையில் இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்து இருக்கிறது. இந்த தடுப்பூசி நன்றாக செயல்படுகிறது என்ற நம்பகத்தக்க ஆதாரங்கள் அந்நிறுவனத்தினிடம் உள்ளதாக ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக தயாரிக்கப்பட்ட பைசர் தடுப்பு மருந்து மைனஸ் 70 டிகிரி சென்டிகிரேடில் பாதுகாக்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி சென்டிகிரெடில் வைத்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் ரன்தீப் குலேரியா. மேலும் இந்த கொரோனா தடுப்பு மருந்தை பாதுகாப்பதற்கும், இம்மருந்தை இந்தியாவிற்குள் விநியோகிப்பதற்கும் எளிமையாக இருக்கும் என்று ரன்தீப் குலேரியா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.