நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா வைரசை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் முதல் விதிக்கப்பட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் தற்போது வரை பல கட்டங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முயற்சியாக கொரோனா வைரசிடமிருந்து வயதான நபர்களை பாதுகாக்க தடுப்பு மருந்தை பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இரண்டு ரூபாய் செலவில் கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறிய இந்த மருத்துவர் அளித்த மனுவை பரிசீலித்து விரைந்து இதுகுறித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டதிலுள்ள ஊத்தங்கரையைச் சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார். இவர் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அது பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததை அடுத்து தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து அவர் தொடர்ந்த இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மருத்துவர் வசந்தகுமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் கண்டுபிடித்துள்ள பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ் என்ற மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும் என்று தெரிவித்தார்.