இந்தியாவில் இவ்வளவு பேருக்கு கொரோனாவா? தொடரும் அச்சுறுத்தல்!
உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பானது உலக அளவில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்தவாறே உள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸானது இந்தியா உள்ளிட்ட ஏறக்குறைய 150 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா,இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கமானது காணப்பட்டு வருகிறது. உலக அளவில் இதுவரை இந்த கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஏறக்குறைய 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக சீனாவை விட அமெரிக்கா இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலும் இந்த கொரோனா வைரசின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக ஆரம்பத்தில் மகாராஷ்ரா, கேரளா போன்ற மாநிலங்களில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களிலும் இந்த வைரஸ் தாக்குதலானது அதிகரித்தவண்ணமே உள்ளது.
இந்த நிலையில், இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,397 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவை பொருத்த வரையில் இந்த கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கையானது 35 ஆகவும், பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையானது 123 ஆகவும் உள்ளது.