இன்னும் ஒருசில தினங்களில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி சோதனையை ஆரம்பிக்கவுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதாவது கொரோனா வைரசை தடுக்க பிசிஜி தடுப்பூசியை பயன்படுத்தி சோதனை செய்ய தமிழக அரசு களம் இறங்கி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது.
உலகெங்கும் நடைபெறும் பெரும்பாலான ஆராய்ச்சிகளிலும், தமிழகமும் முன்னிலையில் உள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சையானது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம், ரெட்மிசிவிர் என்ற மருந்து பரிசோதனையும் தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் மூலமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதியோர் உள்ளிட்ட மக்களையும் காப்பாற்றும் வகையில் பிசிஜி தடுப்பூசி செலுத்தி சோதனை செய்யும் முயற்சியையும் ஆரம்பித்து உள்ளோம்.
தற்போது இந்த ஆய்வுக்கு அனுமதி கிடைத்து உள்ளது. இன்னுமா ஒரு சில தினங்களில் இந்த சோதனை முயற்சி ஆரம்பமாகும். மேலும் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தற்போது வரை ஒரு கோடியே 58 லட்சம் காப்பீட்டு அட்டைகள் உள்ளன.
இந்த அட்டை மூலமாக கொரோனா சிகிச்சைக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் பொதுமக்கள் சிகிச்சை பெறும் வழி வகைகளை தமிழக முதல்வர் செய்துள்ளார். இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வராத மீதமுள்ள 23 சதவீத மக்களுக்கு தான் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு கட்டணத்தை தற்போது நிர்ணயத்துள்ளோம் என்று அவர் கூறினார்.