முதல்வன் பட பாணியில் அரங்கேறிய சம்பவம்! திரிபுராவில் அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்!

Photo of author

By Sakthi

தற்போது நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது .இதனால் பல மாநிலங்களும் திண்டாடி வருகின்றன இன்னும் சொல்லப்போனால் இந்தியா முழுவதுமே ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு இருக்கிறது. இந்த அளவிற்கு இந்த தொற்றின் வேகம் இருக்கிறது இதன் முதல் அலை கூட இவ்வளவு வேகமாக இல்லை ஆனால் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் உயிர் சேதமும் அதிகரித்து இருக்கிறது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் இந்த நோய் தொற்று நோய் கட்டுப்படுத்த இயலவில்லை ஒரே நாளில் 3 லட்சத்து 50 ஆயிரம் தொற்று ஏற்படும் அளவிற்கு தீவிரம் அடைந்து விட்டது இந்த நோய் தொற்றின் அலை.அதோடு இந்த நோய் தொற்று பரவல் காரணமாக, மத்திய அரசு நாடு முழுவதும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது அதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அவ்வாறு இருந்தாலும் ஒரு சில இடங்களில் மக்கள் ஏனோ தானோ என்று இருந்து விடுகிறார்கள். ஆனால் இவர்களையும் காவல் துறையை சார்ந்தவர்கள் தேடிப்பிடித்து கைது செய்து வருகிறார்கள்..அவ்வாறான ஒரு சம்பவம் திரிபுராவில் நடந்திருக்கிறது.திரிபுராவிலும் இந்த நோய் தொற்று அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அங்கே இரவு நேர ஊரடங்கு போடப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் கடந்த 26ஆம் தேதி அங்கே ஒரு திருமணம் நடந்து இருக்கிறது. அதுவும் ஊரையே கூட்டி மிக பிரமாண்டமாக நடத்தி இருக்கிறார்கள். இரவு நேர ஊரடங்கு போது திருமணம் நடத்துவது விதிமீறல் என்றபோதும் இவர்கள் இரண்டு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து மிகவும் பிரமாண்டமாக நடத்துகிறார்கள். இந்த விஷயம் மேற்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் சைலேஷ்குமார் யாதவ் அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

இரவு 11 மணி ஆகிவிட்டது என்றெல்லாம் அவர் எந்த ஒரு பாகுபாடும் பார்க்கவில்லை. அதிரடியாக அந்த திருமண வீட்டிற்குள் நுழைந்த மாவட்ட ஆட்சியர் தன்னுடன் காவல்துறை அதிகாரிகளையும் அழைத்து சென்றிருந்தார். குலாப் மற்றும் மாணிக்கம் என்ற இரண்டு திருமண மண்டபத்தில் நுழைந்து இருக்கிறார்கள் காவல்துறையினர் அப்போதுதான் விதிமுறைகளை மீறி ஏராளமானோர் அந்த திருமண மண்டபத்தில் கலந்து கொண்டு இருப்பதை பார்த்து இருக்கிறார்கள்.

அதன் பின்னர் திருமண மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு அறையாக காவல்துறையினர் நுழைந்து அங்கு இருந்தவர்களை வெளியே தெரிவிக்கிறார்கள். அந்த சமயத்தில் அந்த வீட்டு பெண் ஒருவர் நாங்கள் முறையான அனுமதியுடன் இந்த திருமணத்தை நடத்தி வருகிறோம் என்று மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்திருக்கிறார். அதோடு கையிலிருந்த அனுமதி பேப்பரையும் அவர் காட்டியிருக்கிறார்.

ஆனால் அந்த பேப்பரில் என்ன இருக்கிறது என்பதைக்கூட ஆராயாமல் அதை பிடுங்கி கிழித்துப் போட்ட மாவட்ட ஆட்சியர் ஊரடங்கு நேரத்தில் எவ்வாறு அனுமதி கொடுக்க இயலும் என்று கேள்வி எழுப்பி விட்டு அங்கே புது உடையில் நின்று கொண்டிருந்த மாப்பிள்ளையையும், திருமணத்தை நடத்திக்கொண்டு இருந்த பூசாரியையும், இழுத்து கொண்டு வந்து காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டு இவர்களை கைது செய்யுங்கள் என்று தெரிவித்தார். இதன் காரணமாக மண்டபம் மட்டுமல்லாமல் அந்த பகுதி முழுவதுமே பரபரப்பாக ஆகிவிட்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சைலேஷ்குமார் யாதவ் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கும்போது, இவர்கள் எல்லோரும் 144 தடை உத்தரவை மீறி இருக்கிறார்கள். இதன் காரணமாக, ஐபிசி பிரிவு 188 வழக்கு தொடரப்படும் உடனடியாக கைது செய்யும் உத்தரவை பிறப்பித்து இருக்கிறேன். நாளை முதல் இந்த இரண்டு திருமண மண்டபங்களுக்கு தடை விதிக்கப்படுகின்றது. ஒரு வருடத்திற்கு தடை நீட்டிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

அத்துடன் இந்தப் பகுதியில் இரவு நேர ஊரடங்கு இருந்தும் பலர் விதிகளை மீறி இருக்கிறார்கள். இது தொடர்பாக பொதுமக்கள் காவல்துறையில் பலமுறை புகார் கொடுத்தும் மேற்கு அகர்தலா காவல் நிலையப் பொறுப்பாளர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறார். ஒரு சிலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கின்றார். இதனால் அவரை பணி இடைநீக்கம் செய்யப் பரிந்துரை செய்கின்றேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பகுதியைப் பொறுத்தவரையில் இங்கே இருக்கக்கூடிய யாரும் தங்களுடைய வேலையை சரியாக செய்யததால் நானே இவ்வாறு நேரில் வரும் ஒரு நிலைமை ஏற்பட்டுவிட்டது. ஒருவேளை இந்த திருமணம் நடந்து அதில் யாருக்காவது நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் அதற்கும் அரசாங்கத்தை தான் குறை கூறுவார்கள். ஆனால் இந்த சம்பவத்தை பொதுமக்கள் ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டும். படித்தவர்களே இவ்வாறு செய்தால் பாமர மக்களை என்னவென்று சொல்வது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்த மாவட்ட ஆட்சியர் சைலேஷ்குமார் யாதவ்.