கரூரில் அவசர கதியில் பேருந்தை இயக்கி பொது சொத்துகளை சேதம் ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனர் மீது மாநகராட்சி ஆணையர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (40). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் தேவகோட்டையிலிருந்து, திருப்பூர் வரை செல்லும் அரசுப் பேருந்து காந்திகிராமம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கரூர் பேருந்து நிலையம் செல்வதற்காக அவசர கதியில் அலட்சியமாக பேருந்தை இயக்கி, அரசு பேருந்து ஓட்டுநர் சாலையின் குறுக்கே அமைந்துள்ள சென்டர் மீடியனில் இடித்து விபத்தினை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், சென்டர் மீடியன், எல் இ டி பல்புகள், கேபிள்கள், பவுண்டேஷன் போல்ட்டுகள் உள்ளிட்ட 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
பெருந்தை அவசரகதியில் இயக்கி பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதால் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், தாந்தோணிமலை போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் மதியழகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.