200 கோடி ரூபாய் சொத்தை உதறிவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதிகள்..!!
குஜராத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பவேஷ் பண்டாரி மற்றும் அவரின் மனைவி ஆகிய இருவரும் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்து அவர்களின் 200 கோடி ரூபாய் சொத்தை தர்மம் செய்துள்ளனர்.
ஜெயின் மதத்தை சேர்ந்த பவேஷ் பண்டாரியின் 19 வயது மகளும் 16 வயது மகனும் கடந்த 2022ஆம் ஆண்டு துறவறம் மேற்கொண்டனர். இது அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், தங்கள் குழந்தைகளை தொடர்ந்து தற்போது பவேஷ் பண்டாரியும் அவரது மனைவியும் துறவறம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இதற்காக அவர்களின் 200 கோடி ரூபாய் சொத்துக்களை கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் துறவற வாழ்வியலை மேற்கொள்ள இந்த தம்பதிகள் உறுதிமொழி எடுக்க உள்ளனர். கோடீஸ்வரரான பவேஷ் பண்டாரியின் குடும்பத்தினர் எடுத்துள்ள இந்த முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் ஜைன மதத்தில் தீக்ஷா எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்க துறவறமாகும். இதுபோன்ற துறவறத்தில் ஈடுபடும் நபர்கள் அவர்களுக்கென எந்த சொத்தும் வைத்துக்கொள்ளாமல் யாசகம் பெற்று உயிர்வாழ வேண்டும். அதேபோல் காலணிகள் எதுவும் அணியாமல் வெறுங்காலுடன் தான் நடக்க வேண்ட்டும்.
அவர்களின் தனிப்பட்ட தேவைக்காக இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் பெறுவதற்கான பாத்திரம், அவர்கள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்ய ரஜோஹரன் என்ற வெள்ளை விளக்கமாறு ஆகிய பொருட்களை மட்டுமே தீக்ஷை எடுக்கும் நபர்கள் வைத்துக்கொள்ள வேண்டும். கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் ஒரு குடும்பம் முழுவதுமாக துறவறம் மேற்கொள்ள இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.