நாட்டிலுள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM கிசான்) என்ற பெயரில் அரசு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் எண்ணற்ற விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். தற்போது PM கிசான் திட்டத்தினை பயன்படுத்தி போலியான லிங்க் மூலம் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட ஒரு கும்பல் களம் இறங்கியுள்ளது. இது போன்ற போலியான லிங்குகளை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
யுபிஐ தளங்களின் வளர்ச்சி பரிவர்த்தனையை எளிதாக்கியுள்ளது என்றாலும், இதனால் ஏற்படக்கூடிய மோசடி சம்பவங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாளொன்றுக்கு ஒரு நபராவது மோசடியில் சிக்கி பணத்தை இழக்கின்றனர் .தமிழ்நாடு காவல்துறை சமீபத்தில் இது குறித்து ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. யுபிஐ பயனர்களை இலக்காகக் கொண்டு ஒரு புதிய மோசடி துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீபத்திய நாட்களில் போன் பே அப்ளிகேஷன் மூலம் அங்கீகரிக்கப்படாத பணப்பரிவர்த்தனை நடந்ததாக பல சம்பவங்கள் நடந்துள்ளன. நவம்பர் மாதத்தில் மட்டும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 7 புகார்கள் பதிவாகியுள்ளன. அப்பாவி மக்களுக்கு தெரியாமல் தங்களுடைய அக்கவுண்டுகளில் இருந்து கழிக்கப்பட்ட பணம் அமேசான் பே-க்கு மாற்றப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கீகரிக்கப்படாத பணப்பரிவர்த்தனை செய்வதற்காக PM கிசான் யோஜனா திட்டத்தின் பெயரை பயன்படுத்தி போலியான லிங்குகள் உபயோகப்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த லிங்குகளை வாட்ஸ் அப் டெலிகிராம் போன்ற பல்வேறு மெசேஜிங் தளங்களின் மூலம் அனுப்பியுள்ளனர். சில பயனர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் லிங்க் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த லிங்குகளில் ஒரு படிவத்தை கொடுத்து.. அந்த படிவத்தில் தனி நபரின் பெயர், ஆதார் நம்பர், போன் நம்பர், பிறந்த தேதி போன்ற முக்கியமான தனிப்பட்ட விவரங்களை திருடியுள்ளனர். இதை வைத்தே இந்த மோசடி சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. நீங்கள் இதே போன்ற சம்பவத்தில் சிக்கி உங்கள் பணத்தை இழந்திருந்தால் “1930” என்ற எண்ணிற்கு அழைப்பு விடுத்து உங்களுடைய புகாரை பதிவு செய்யலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாக உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.
PM கிசான் திட்டம் தொடர்பான எந்த ஒரு சேவை பெற வேண்டுமானாலும் அதற்கு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ போர்ட்டலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போலியான லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறையினர் தொடர்ந்து எச்சரித்தாலும், ஏமாறும் மக்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை. அவரவர் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட்டால் மட்டுமே இது போன்ற மோசடி சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.