சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட சிஆர்பிஎஃப் முகாமில் சக வீரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சார்ந்து இருக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் நடமாட்டம் மிகுந்த மாவட்டம் ஆகும். இதனால் நக்சலைட்டுகளை கட்டுபடுத்த அங்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் முகாம்கள் அமைத்து நக்சலைட்டுகளை தேடி வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சுக்மா மாவட்டத்திலுள்ள லிங்கம் பள்ளி அருகே அமைக்கப்பட்டிருக்கும் சிஆர்பிஎஃப் 50 வது கேம்பில் இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் திடீரென்று துப்பாக்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது.
நக்சலைட்டுகள் சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கியிருக்கும் முகாமில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் என்ற கண்டறியப்பட்டது. ஆனால் அங்கே தங்கியிருந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் சக வீரர்கள் மீது தன்னிடமிருந்த ஏ.கே 47 துப்பாக்கியால் சுட்டு விட்டார்.
இதில் 7 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்த நிலையில் அவர்களில் 3 பேர் அங்கேயே பரிதாபமாக மரணமடைந்தனர். தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக ஹெலிகாப்டர்களை வரவழைத்து படுகாயமடைந்த 4 பேரையும் தெலுங்கானா மாநிலம் பத்ராஜலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அவர்களில் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே மரணமடைந்துவிட்டார். மற்ற மூன்று பேரும் பத்ராசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு பற்றி சிஆர்பிஎப் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.