கியூபா : குழந்தைகளுக்கும் தடுப்பூசி திட்டம் தொடக்கம்!

Photo of author

By Parthipan K

உலகிலேயே முதல் முறையாக 2 வயதிற்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், தற்போது பெரும்பாலான நாடுகள் 12- வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடத்தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், உலகிலேயே முதல் முறையாக 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி கியூபாவில் தொடங்கியுள்ளது. அப்டாலா மற்றும் சோபிரனா ஆகிய இரு தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனை முடிவடைந்தையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் 12-வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு போடும் பணியை கியூபா தொடங்கியது. இந்த சூழலில், நேற்று முதல் 2-வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது. கியூபாவின் மத்திய மகாணமான சியன்பியூகோஸ் பகுதியில் குழந்தைகளுக்கு தடுப்பூசி விநியோகிக்கும் பணியை தொடங்கியுள்ளது.

சீனா, ஐக்கிய அரபு அமீரகம், வெனிசூலா ஆகிய நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தாலும், கியூபாவில் முதன் முறையாக போடப்பட்டுள்ளது. கியூபாவில் போடப்பட்டுள்ள தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில் கியூபா பல நாடுகளுக்கு முன்னுதாரனமாக இருந்துவருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே ஒப்பிடும்போது கொரோனா உயிரிழப்புகள் சதவீதம் கியூபாவில் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது.