கடலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாகவே தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அவ்வாறு பெய்து வரும் கனமழை காரணமாக கடலூர் மாவட்டமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார், இரண்டு சக்கர வாகனங்கள் போன்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
சுமார் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். விரைவில் அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் இன்னும் சில வீடுகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்பதற்கு மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் அங்கு முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.