இன்று முதல் இரவு ஊரடங்கு! அரசின் அதிரடி நடவடிக்கை!
கொரோனா தொற்றானது தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. டெல்டா, டெல்டா பிளஸ் ஆக இருந்த கொரோனா தற்போது ஒமைக்ரானாக உருமாறி உள்ளது. தற்பொழுது அனைத்து நாட்டிலும் இத்தொற்று தீவிரமாக பரவி வருகிறது. மக்கள் இதிலிருந்து விடுபட முடியாமல் மீண்டும் மீண்டும் இந்த தொற்றின் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.இந்தியாவில் பல மாநிலங்களில் இத் தொற்றானது தொடர்ந்து அதிகரிப்பதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவா ,மேற்கு வங்க அரசு ஆகியவை பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தி பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மாணவர்கள் பழைய முறையைப் போல ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பித்து வருகின்றனர். அதேபோல பஞ்சாபில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிப்படைந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இன்றுவரை 1741 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நாளுக்கு நாள் பஞ்சாப் மாநிலத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் அம்மாநில அரசு இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என பஞ்சாப் அரசு கூறியுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் கோவா அரசைப் போலவே பஞ்சாப் அரசும் பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளனர்.
முன்பைப் போல ஆன்லைன் கல்வி முறையை தொடரலாம் என்றும் கூறியுள்ளனர். அதேபோல 2 தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் பணிபுரிய முடியும் என புதிய உத்தரவை பஞ்சாப் அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும் திரையரங்குகள் ,மால்கள் ஆகிய மக்கள் கூடும் இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே வைத்து இயக்க வேண்டும் என்றும் பஞ்சாப் அரசு கூறியுள்ளது.