இதுவரை ‘டிரா’ ஆகாத பகல்-இரவு டெஸ்ட் போட்டி!

Photo of author

By Parthipan K

இதுவரை ‘டிரா’ ஆகாத பகல்-இரவு டெஸ்ட் போட்டி!

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று இந்தியாவுடன் விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை முழுமையாக கைபற்றியது இந்திய அணி. இதையடுத்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.

மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் இரண்டு மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டி பகல்-இரவு போட்டியாக நடைபெற உள்ளது.

இந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை, இதுவரை நடந்துள்ள 18 டெஸ்டுகளில் ஒரு போட்டிக்கூட ‘டிரா’ ஆகவில்லை அனைத்து போட்டிகளிலும் முடிவு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், “இந்திய அணி இதுவரை விளையாடிய மூன்று பகல்-இரவு டெஸ்டில் இரண்டில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது.” இலங்கை அணியும் மூன்று பகல்-இரவு டெஸ்டில் விளையாடி இரண்டில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் சந்தித்துள்ளது.

2019-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அடுத்து 2020-ம் ஆண்டில் அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் படுதோல்வி அடைந்தது. கடந்த ஆண்டு ஆமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இரண்டே நாளில் அந்த அணியை வீழ்த்தி இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.