முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குறித்த முடிவு!! கர்நாடகா உயர்நீதிமன்றம்!!

Photo of author

By Gayathri

2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் முன்னாள் முதல்வர் ஆட்சியில் உள்ள காலத்திலேயே இறைவனடி சேர்ந்தார். இவர் இறக்கும் தருவாயில் இவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஆனால் இவர் இறந்த நிலையில் முடக்கப்பட்ட இவருடைய சொத்துக்கள் ஆனது கர்நாடகா அரசின் கஜானாவில் வைக்கப்பட்டது. இது குறித்து சிபிஐ மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.

கர்நாடக கருவூலத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 17 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி நகைகள் 6 டிரங்கு பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலமிட வேண்டும் என்று நரசிம்ம மூர்த்தி பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சொத்துக்கள் அனைத்தும் தனக்கு சேர வேண்டியவை எனவும், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

ஆனால், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தின் வசம் இருக்கும் ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துக்களை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கானது கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது, தீபா தரப்பில் “சென்னை உயர்நீதிமன்றம் தீபாவை ஜெயலலிதாவின் வாரிசு என்று அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த சொத்துகள் அனைத்தும் எங்கள் தரப்புக்கு சேர வேண்டும். ஆகவே, கணக்கில் காட்டப்பட்ட சொத்துக்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தார். அதுவரை ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழக அரசிடம் வழங்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.