வெற்றிக்கு காரணம் என்ன? இந்திய கேப்டன் கே எல் ராகுல் பதில்
ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணியில் காயத்தில் இருந்து மீண்ட குல்தீப் யாதவ், கே எல் ராகுல், தீபக் சஹார் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றைய போட்டியில் விளையாடினர்.
ஆரம்பம் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழந்து வெளியேறினர். இதனால் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா சார்பில் தீபக் சஹார், பிரசித் கிருஷ்ணா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்களை அதிகபட்சமாக கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி எளிதாக வெற்றி பெற்றது. ஷிகார் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அரைசதம் அடித்தனர். 6 மாதத்துக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த தீபக் சஹார் 3 விக்கெட்கள் வீழ்த்தியதற்காக ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் போட்டிக்குப் பின்பு பேசிய இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுல் “ காயத்தில் இருந்து குணமாகி இந்திய அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற பவுலர்கள்தான் முக்கியக் காரணம். அடுத்தடுத்த போட்டிகளையும் சிறப்பாக விளையாடி தொடரை வெல்ல முயற்சிப்போம்” எனக் கூறியுள்ளார்.