வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி! நாளை மறுதினம் புயலாக மாறுகிறது!

0
87

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருகிறது, இதனால் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகின்றது தமிழகத்தில் இயல்பை விட சராசரியாக 83% அதிக அளவில் பெய்து இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் நேற்று முதல் மழை சற்று குறைந்து வருகின்றது, அதோடு இரண்டு நாட்களுக்கு மழை குறைந்து தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்சமயம் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் வரையில் நீடிப்பதால் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியிருக்கிறார்.

அதன் அடிப்படையில், இன்றைய தினம் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாளைய தினம் மற்றும் நாளை மறுதினம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளிலும் 4ஆம் தேதி ஒரு சில பகுதிகளிலும் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டி இருக்கக் கூடிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்சமயம் உருவாகியிருக்கின்றது. இது தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை, ஆனால் அந்தமான் கடல் பகுதி மற்றும் அந்தமான் தீவு பகுதிகளில் இன்றும், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நாளைய தினமும், மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளை மறுதினமும், நான்காம் தேதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதால் மீனவர்கள் இந்த தினங்களில் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேபோல அரபிக்கடலில் கோவா கடற்பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.