காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!!

Photo of author

By Parthipan K

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இது நேற்று காலையில் மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று (பிப்ரவரி 7) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (பிப்ரவரி 8) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் மற்றும் வியாழக்கிழமையன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, வடதமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்திலும், இடை இடையே மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.