தர்மபுரியில் இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதியமான் பைபாஸ் சாலையில் உள்ள தடங்கம் பகுதியில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப இளைஞர்கள் வந்துள்ளனர்.
அப்போது தனது இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோலை நிரப்பி விட்டு தன்னுடைய நண்பர்களுக்காக பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பிய போது, வெள்ளை நிறத்தில் இருந்தால் சந்தேகமடைந்து சோதனை செய்து பார்த்தபோது 80% தண்ணீர் கலந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தண்ணீர் கலந்த பெட்ரோலை குறித்து பங்கில் வேலை செய்த ஊழியர்களிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காததால், வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பங்க் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அங்கு வந்த போலீசார், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்ப கோரி பரிசோதனை செய்தார். அப்போது, தண்ணீர் கலந்த பெட்ரோல் வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, போலீசார் அங்கு இருந்த பொது மக்களை அப்புறப்படுத்தி பெட்ரோல் பங்கை இழுத்து மூடினார்.
இதுகுறித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது மழை பெய்ததால் பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்த பிறகு முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.