இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி விவசாயத்தில் கவனம் செலுத்தியிரிப்பது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா பாதிப்பால் பண்ணை வீட்டில் முடங்கியுள்ள தோனி, ராஞ்சியில் உள்ள 7 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டியுள்ள பண்ணை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கிரிக்கெட் பிரபலங்களில் தோனி எப்போதுமே தனித்துவமாக செயல்படக் கூடியவர்.
குறிப்பாக விளையாட்டின் போது பேட்ஸ்மேன்களை விரைவாக ஸ்டம்ப் இட் செய்வதும், கடைசி நேரத்தில் பல வியூகங்களை வகுத்து வெற்றிக்கனியை பறிப்பதில் வல்லவர். இவருடைய அசாத்திய பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.
விலையுயர்ந்த கார்கள், இருசக்கர வாகனங்களை வாங்கி ஓட்டுவதில் தோனி அலாதியான எண்ணம் கொண்டவர். இதற்காகவே பல உயர்ரக கார்களையும் இருசக்கர வாகனங்களையும் வாங்கி வைத்துள்ளார்.
இதில் அடுத்தபடியாக தனது பண்ணை வீட்டில் விவசாயம் செய்வதற்காக 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயில் புதிய டிராக்டர் ஒன்றை வாங்கி ஓட்டி பார்த்துள்ளார். இந்த வீடியோ சென்னை சூப்பர் கிங்ஸ் இணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டு வைரலாகி வருகிறது.
கோடிக்கணக்கில் பணம் இருந்து வெளிநாடு சுற்றுலா, பிசினஸ் என்று செலவு செய்பவர்களுக்கு மத்தியில் இயற்கை விவசாயத்தின் மீது தோனி ஆர்வம் காட்டியிருப்பது தனித்துவமாக தெரிகிறது.