MSD, கிரிக்கெட் சமூகத்தின் எல்லோரும் உச்சரிக்கும் தவிர்க்க முடியாத பெயர். சில மாதங்களாக இந்த பெயர் இந்திய அணி ஆடும் லெவேனில் இல்லாமல் இருப்பது இவரின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்குமே ஏனோ ஏமாற்றம் தான்.
அப்படி இந்தியாவுக்கு என்ன செய்து விட்டார், சென்னை ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்த “ தல தோனி”.
மகேந்தர் சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து இன்றுடன் 15 ஆண்டு நிறைவு பெறுகிறது. பங்களாதேஷ்க்கு எதிராக 2004 இதே நாளில் தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தார். முதல் படியே மாபெரும் சறுக்கல், பங்களாதேஷிற்கு எதிராக ஆடிய முதல் போட்டியில் ரன் அவுட்டாகி டக் அவுட்டில் வெளியேறினார்.
அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் அடுத்த ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் தேர்வானார் அந்தத் தொடர் அவர் வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையாக அமைந்தது ஜெய்ப்பூரில் நடந்த மூன்றாவது போட்டியில் மகேந்திர சிங் தோனி 183 ரன்கள் எடுத்தார் இதுவே அவர் ஒருநாள் போட்டியில் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும் அதற்குப் பிறகு எல்லாம் அவருக்கு ஏறுமுகம்தான் .
அதுவரை ஒரு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்பது இந்தியாவுக்கு சரியாக அமையவே இல்லை.அவர் பேட்டிங் கீப்பிங் திறமை விட அவரின் ஹேர் ஸ்டைல் தான் அனைவராலும் முதலில் உற்று நோக்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கு எதிரான நடந்த தொடரில் இந்திய அணி 4 க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.அப்போது பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரப் தோனியின் ஹேர்ஸ்டைலை வெகுவாக பாராட்டினார்.
2007 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்’ல் நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதல் சுற்றிலேயே படு தோல்வி அடைந்து வெளியேறியது. இதன் பிறகு இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த ஆண்டு டி 20 உலகக்கோப்பைஅறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அணியின் கேப்டனாக இருந்த டிராவிட் விலகி இளைஞர்களுக்கு வழி கொடுக்க வேண்டும் என்று எண்ணினார்.
சேவாக், யுவராஜ் போன்ற முன்னணி வீரர்களில் ஒருவர் கேப்டனாக்க படுவர் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் . சச்சின் டெண்டுல்கர் வழிகாட்டுதலில் அதிரடியாக கேப்டனாக விஸ்வரூபம் எடுத்தார் தோனி.
ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாமல், தோனியின் தலைமையில் இளம் படை தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பையை எதிர்கொண்டது. சீனியர் வீரர்கள் இல்லாமல் 20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் தோனியின் படை அந்த உலக கோப்பையை வென்று மாபெரும் சாதனை படைத்தது.
அதுவும் கடைசி ஓவரை யாரும் எதிர்பாராத விதமாக ஜோகிந்தர் சர்மாவை வீச வைத்துதான் தோனியின் முதல் “மாஸ்டர் ஸ்ட்ரோக்”.
அதன்பிறகு டோனியை அனைத்துவிதமான போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது.
இதனால் ஒருநாள் அணிக்கும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரை கேப்டனாக நியமித்தது சரிதான் என்று நிரூபிக்கும் வண்ணம் 2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வென்று சரித்திரம் படைத்தது.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தோனி அடித்த வின்னிங் ஷார்ட் சிக்ஸர் இன்றும் மறக்க முடியாத ஒன்றாகும். கூல் கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் தோனி, 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற அனைத்துவிதமான ஐ சி சி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றவர்.
கில்கிறிஸ்ட், சங்ககரா போன்ற உலகத்தரமான விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பட்டியலில் உலகில் மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளார். கடந்த உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிராக ஆடியதுதான் தற்போதைக்கு இவரின் கடைசி போட்டியாகும். அதற்குப்பிறகு பங்களாதேஷிற்கு எதிரான தொடரில் பங்கேற்காமல், ராணுவத்தில் பணியாற்றுவதாக தெரிவித்தார்.
அதன் பிறகு இரண்டு மாதம் கழித்து அடுத்து வரும் தொடர்களில் இவர் பெயர் இடம் பெறாததால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அடுத்தாண்டு துவங்கும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக “தல தோனி “ களமிறங்குவார் என்று சென்னை ரசிகர்களும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் . தோனியின் 15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை கொண்டாடும் விதமாக தோனியின் ஹேஷ் டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.