“உலகம் ஒரு குடும்பம் ” – மிஸ் டீன் சர்வதேச பட்டம் வென்ற இந்திய சிறுமி கருத்து.

0
106

உலகளவில் பலவகையான அழகு போட்டிகள் நடப்பதுண்டு. உலக அழகி, பிரபஞ்ச அழகி போட்டிகளை தாண்டியும் பல வகையில் அழகு போட்டிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு அழகி போட்டிதான்  மிஸ் டீன் சர்வதேச அழகுப் போட்டி. இது  உலகின் மிகப் பழமையான போட்டியாகும். கடந்த 27 ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து சென்ற ஒருவரும் இப்போட்டியில் வெற்றி பெற்றதில்லை, இந்நிலையில்  சமீபத்தில் நடந்த இந்த ஆண்டிற்கான மிஸ் டீன் சர்வதேச போட்டியில் பங்கேற்ற இந்தியாவின்  வதோதராவைச் சேர்ந்த பதினாறு வயதான ஆயுஷி தோலாகியா, “மிஸ் டீன் சர்வதேச “மகுடத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

பாரம்பரிய கதக் நடனத்தில் தேர்ச்சி பெற்றுள்ள இந்த 11-ஆம் வகுப்பு மாணவி, இந்த ஆண்டிற்கான தேசிய அளவிலான சிறந்த ஆடை விருதும், சிறந்த பேச்சாளர் விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  மிஸ் டீன் சர்வதேச மகுடத்துக்காக 22 நாடுகள் போட்டியிட்டன; பராகுவேவைச் சேர்ந்த யெசீனியா கார்சியா முதல் ரன்னர்-அப் ஆகவும், போட்ஸ்வானியாவைச் சேர்ந்த அனிசியா இரண்டாம் ரன்னர்-அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

பொதுவாக அழகிப்போட்டிகளில் கடைசியாக ஒரு கேள்வி முன்வைக்கப்படும், அதற்கான பதிலை வைத்தே வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கபடுவது வழக்கம். அவ்வாறு ஆயுஷி தோலக்கியா’விடம் கேட்கப்பட்ட கேள்வி  “தனி நாடுகளாக இல்லாமல் ஒரே உலகம், ஒரே அரசாங்கமும்  என இருந்தால் இவ்வுலகம் சிறந்த இடமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” இந்த கேள்விக்கு அவரது பதில் கூர்மையாக இருந்தது.

ஆயுஷி கூறுகையில்: “ஒரே உலகம், ஒரே அரசாங்கமும்  என இருந்தால் இவ்வுலகம் சிறந்த இடமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, காரணம் ஒவ்வொரு நாடும் அவற்றின் புவியியல் பகுதி, மக்களின் பழக்க வழக்கம் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றில் பிரிக்கப்பட்டுள்ளன. உலகின் அனைத்து அரசியல் தலைவர்களும் தங்கள் நாட்டு மக்களுக்கு எது சிறந்தது என்பதை நன்கு அறிவார்கள்.ஒரு இந்தியராக இருப்பதால், “வசுதைவ குடுமகம்’ என்றுதான் நான் நினைக்கிறேன். அதாவது உலகம் ஒரு குடும்பம் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.  எனவே, வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு அரசாங்கம் என்று பிரிந்திருந்தாலும், நாம் அனைவரும் ஒரே குடும்பம்.  அன்பும் அமைதியையும் கொண்டவர்கள். ” என்றார்.

வியட்நாமில் இருந்து து ஃபான் மிஸ் டீன் ஆசியாவையும், இத்தாலியைச் சேர்ந்த மரியா லூயிசா பிராஸ் மிஸ் டீன் ஐரோப்பாவையும், போட்ஸ்வானாவைச் சேர்ந்த அனிசியா மிஸ் டீன் ஆப்பிரிக்காவையும், பிரேஸிலிலிருந்து அலெக்ஸாண்ட்ரா சாண்டோஸ் மிஸ் டீன் அமெரிக்காவையும் வென்றனர்.

author avatar
Parthipan K