இந்த கிரிக்கெட்டில் தோனியின் காலம் முடிந்துவிட்டது –ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ரவி சாஸ்திரியின் பேட்டி !

இந்த கிரிக்கெட்டில் தோனியின் காலம் முடிந்துவிட்டது – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ரவி சாஸ்திரியின் பேட்டி !

இந்திய முன்னாள் கேப்டன் தோனி விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அனியின் முன்னாள் கேப்டன் தோனியின் வருகை இந்திய கிரிக்கெட்டின் மறுமலர்ச்சிக்காலம் என சொல்லலாம். கபில் தேவ், சச்சின் வரிசையில் அதிசயமாகப் பூக்கும் குறிஞ்சி மலரைப் போல இந்திய அணியை தூக்கி நிறுத்தியவர். 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பையை தனது தலைமையில் பெற்று தந்தவர். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக தனது கேப்டன் பொறுப்பை விட்டு விலகி அணியில் ஒரு வீரராகப் பங்கேற்று வந்தார். இந்திய அணிக்காக அவர் கடைசியாக அவர் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியுசிலாந்துக்கு எதிராக விளையாடினார். அதன் பிறகு சர்வதேச போட்டிகளுக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

38 வயதாகும் தோனி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வருவாரா என்பதுதான் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதில் உள்ள கேள்வி. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்பது போல இளம் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்நிலையில் தோனி குறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அவரது பேச்சில்   ‘ தோனியின் ஓய்வு பற்றி நாங்கள் இருவரும் கலந்தாலோசித்தோம். அது எங்கள் இருவருக்கும் இடையிலானது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் ஓய்வை அறிவிப்பார். அவரது வயதில் அவர் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி தனது உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதை பொறுத்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை அமையும்’ எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக்கோப்பை டி 20 தொடரில் அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பது ஐபிஎல் போட்டிகளில் அவரது ஆட்டத்தை பொறுத்தே அமையும் என ரவி சாஸ்திரி சொல்லாமல் சொல்லியுள்ளார்.

Leave a Comment