“இதை நான் முன்பே செய்திருக்க வேண்டும்…” தன் தவறு குறித்து பேசிய தினேஷ் கார்த்திக்

Photo of author

By Vinoth

“இதை நான் முன்பே செய்திருக்க வேண்டும்…” தன் தவறு குறித்து பேசிய தினேஷ் கார்த்திக்

இந்திய அணியில் தனது இடத்துக்காக 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி தற்போது டி 20 அணியில் இடம்பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

2004 ஆம் ஆண்டே இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தோனி என்று சொல்லலாம். அவரின் வருகைக்குப் பின்னர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை இந்திய அணிக்கு ஏற்படவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் சில போட்டிகள் விளையாடுவதும் பின்னர் நீக்கப்படுவதும் என இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக கூட செயல்பட்டார்.

2022 ஆம் ஆண்டில் ஒரு ஐபிஎல் தொடரின் மூலமாக, தினேஷ் கார்த்திக் அற்புதமான திருப்புமுனையைப் பெற்றுள்ளார். RCB அணிக்காக பின் வரிசையில் சிறப்பான பேட்டிங் செய்ததன் மூலம் மீண்டும் தேசிய அணிக்கு திரும்பினார். இதையடுத்து கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி டி 20 போட்டிகளில் தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தினேஷ் கார்த்திக் தான் செய்த தவறு பற்றி பேசியுள்ளார். அதில் ‘2022 ஆம் ஆண்டு ஐபிஎல் க்கு முன்பு நான் பவர் ஹிட்டிங் பயிற்சி மேற்கொண்டேன். இதை நான் சில ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும், அப்படி செய்திருந்தால் எனக்கு தொடர்ந்து அணியில் இடம் கிடைத்திருக்கும். பரவாயில்லை இப்போது சிறப்பாக அதை செய்துகொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.