“என்னால் அழுதுகொண்டே இருக்க முடியாது…” மனம் திறந்த லைகர் பட இயக்குனர்
சமீபகாலத்தில் தென்னிந்தியாவின் வளரும் இளம் நட்சத்திரங்களில் ஒருவாராக வலம் வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டீயர் காம்ரேட், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படங்கள் மூலம் கோடிக் கணக்கான ரசிகர், ரசிகைகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன் தயாரிப்பில் பூரி ஜகந்நாத் இயக்கத்தில் லைகர் படத்தின் மூலம் பேன் இந்தியா ஹீரோவானார். இந்த படத்தில் அவரோடு ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே, குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஆகியோர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸானது.
ஆனால் ரிலீஸூக்குப் பிறகு இந்த திரைப்படம் படுமோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதனால் இரண்டாம் நாளில் இருந்து தியேட்டரில் ஈயாட ஆரம்பித்தது. இதனால் படத்தின் வசூல் பாதிப்படைந்து பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது. இதனால் படத்தின் இயக்குனர் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுத்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் லைகர் தோல்விக்கு பிறகு முதல் முதலாக பேசியுள்ள பூரி ஜெகன்னாத் ‘என்னால் லைகர் தோல்வியை நினைத்து அழுது கொண்டே இருக்க முடியாது. நான் அந்த படத்துக்காக 3 ஆண்டுகள் உழைத்தேன். அதிக நாட்கள் அந்த படம் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இப்போது அதிலிருந்து நான் நகர்ந்துவிட்டேன். அடுத்து ஒரு படம் தரமானதாக நான் ரசிகர்களுக்கு கொடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.