ஆபாசமாகத் திட்டிய இயக்குனர்:மைக்கில் மன்னிப்புக் கேட்கவைத்த துணை நடிகைகள் !
தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பின் போது துணை நடிகைகளை ஆபாசமாகப் பேசிய இயக்குனர் குறித்து காவல் நிலையத்தில் நடிகைகள் புகா கொடுத்துள்ளனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜி தமிழில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல் செம்பருத்தி. இத்தொடரை நீராவி பாண்டியன் எனும் இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த தொடருக்காக திருவேற்காட்டில் திருமணக் காட்சி ஒன்றைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார் நீராவி பாண்டியன். திருமணக்காட்சி என்பதால் 50க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அப்போது காட்சிகளில் சரியாக நடிக்காத துணை நடிகைகளை இயக்குனட்ர் மைக்கிலேயே ஆபாசமாகத் திட்டியுள்ளார். இதனால் அதிருப்தியான 15க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறி திருவேற்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் வந்து இயக்குனரைக் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்துள்ளனர். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இயக்குனர் சமாதானமாகப் போகலாம் என சொல்ல, துணை நடிகைகளோ காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மன்னிப்புக் கேட்டால்தான் வழக்கை வாபஸ் வாங்குவோம் என சொல்லியுள்ளனர்.
இதையடுத்து இயக்குனர் எப்படி மைக்கில் அனைவரின் முன்னால் ஆபாசமாக திட்டினாரோ அதே போல மைக்கில் மன்னிப்புக் கேட்டார். இதையடுத்து பிரச்சனை சுமூகமாக முடிய படப்பிடிப்புத் தொடங்கப்பட்டது. இந்த சம்பவம் திரையுலகில் பரவ பரபரப்பு ஏற்பட்டது.