வீணானது இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி: மொத்தமாக வாரிக்கொடுத்த பவுலர்கள்!நியுசிலாந்து வெற்றி!

0
58

வீணானது இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி: மொத்தமாக வாரிக்கொடுத்த பவுலர்கள்!நியுசிலாந்து வெற்றி!

இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியுசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால் அவர்களுக்குப் பதிலாக பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் இறக்கப்பட்டனர்.. 20 ரன்கள் சேர்த்த பிருத்வி ஷா கிராண்ட்ஹோம் பந்தில் அவுட் ஆனார். அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே மயங்க் அகர்வால் 35 ரன்களில் அவுட் ஆக இந்தியா 54 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அதன் பிறகு கேப்டன் கோலியுடன் கைகோர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரேயாஸ் ஐயர். கோலி அரைசதம் அடித்து அவுட் ஆனார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. அதன் பின் வந்த ராகுலோடு கைகோர்த்து விளையாடிய ஸ்ரேயாஸ் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து 103 ரன்களில் அவுட் ஆனார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ராகுல் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தார். கடைசியாக வந்த கேதார் ஜாதவ்வும் அதிரடியில் களமிறங்க ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் இந்திய அணி  50 ஓவர்களில் 347 ரன்கள் சேர்த்தது. ராகுல் அவுட்டாகமால் 87 ரன்களும் கேதார் ஜாதவ் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற நியுசிலாந்து முதலில் பவுலிங்கை தேர்வு செய்து ஆடியது. இதில் இந்திய அணி கோலி(51), ராகுல்(88) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்(103) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 347 ரன்களை சேர்த்தது.

348 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கோடு களமிறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்ட்டின் கப்தில் மற்றும் நிக்கொல்ஸ் முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்ந்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து சென்றனர். அதன் பின் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராஸ் டெய்லர் மற்றும் டாம் லாத்தம் அதிரடியில் புகுந்து இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 200 ரன்களில் இருந்து 300 ரன்களுக்கு வெறும் 46 பந்துகளில் சென்றது. சிறப்பாக விளையாடிய லாதம் 69 ரன்களில் அவுட் ஆனார். கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த ராஸ் டெய்லர் தனது 21 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இதனால் அந்த அணி 48.1 ஓவர்களில் 348 ரன்களை 6 விக்கெட் இழப்புக்கு எடுத்தது. ராஸ் டெய்லர் 84 பந்துகளில் 109 ரன்கள் சேர்த்திருந்தார்.இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலானத் தொடரில் அந்த அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது. இந்திய பவுலர்களில் பூம்ராவைத் தவிர அனைவரும் வாரி வழங்கியதாலும் மோசமான பீல்டிங்காலும் 347 ரன்கள் சேர்த்தும் இந்தியாவில் வெல்ல முடியவில்லை.

author avatar
Parthipan K