இந்தியா முழுவதும் டிஜிட்டல் மோசடி கைது என்ற பெயரில் இயங்கி வந்த 17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கான நடவடிக்கையை மத்திய உள்விவகாரத் துறை அமைச்சகம் எடுத்துள்ளது.
டிஜிட்டல் கைது மோசடி என்பது, மோசடியாளர்கள் காவல்துறை அல்லது நீதித் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் போல, சாதாரண மக்களிடம் பேசி, அவர்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி, பெரிய அளவில் பணத்தை பரிமாற்றம் செய்தால், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கலாம் என ஏமாற்றுவதாகும்.
இந்த மோசடியில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், இந்த வாட்ஸ்ஆப் கணக்குகள் பெரும்பாலும் கம்போடியா, மியான்மர், லாவோஸ், தாய்லாந்து நாடுகளிலிருந்து மோசடி போன்ற குற்றச்செயல்களுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் மூலம், மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோசடிகள் பலவும், கம்போடியாவில் இருக்கும் சீன காசினோக்களில் இயங்கும் கால் செண்டர்கன் மூலம் நடப்பதாகவும், வேலை வாங்கித் தருவதாக கம்போடியா அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் அங்கு, இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுத்தப்படுவது குறித்தும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.