ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி
ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராக எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த வழக்குரைஞர் அஸ்வினி உபாத்தயாயா தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் நியாயமற்றதாக உள்ளது.
இரு தொகுதிகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில், மீண்டும் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. எனவே, இந்த சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்தமனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கும் விவகாரம் நாடாளுமன்ற கொள்கை சார்ந்த விவகாரம். இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டியது நாடாளுமன்றம் தான் என தெரிவித்து பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.