தூளிக்கட்டி தூக்கி செல்லும் மக்கள்! கலங்கும் ஏற்காடு மலைவாசிகள்! செவி சாய்க்குமா தமிழக அரசு!
சேலம் ஏற்காடு மலை பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு தூளி கட்டி கொண்டு செல்லும் மலை கிராமத்தினர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏற்காடு பகுதியில் கொடிக்காடு என்ற கிராமம் உள்ளது. சாலை வசதிகள் எதுவும் ஏற்படுத்தித் தராததால் வாகனங்கள் வந்து செல்ல சாலை வசதி இல்லாததால் நோயுற்ற மக்களை தூளி கட்டி தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சாலை வசதிக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை இப்பகுதி மக்கள் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கொடிக்காடு கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த சமயத்தில் முதியவர் ஒருவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். இவரை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாததால் கரடு முரடான பாதைகளில் தூளி கட்டி 5 கிலோ மீட்டர் வரை நடந்து தூக்கி சென்று ஏற்காடு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை கரடுமுரடான மலைப் பகுதிகளில் கொட்டும் மழையைக் கூட பொருட்படுத்தாமல் அப்பகுதி மக்கள் அந்த முதியவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கிராமவாசி ஒருவர் கூறுகையில் ” இதுதான் எங்கள் நிலைமை 5 கிலோ மீட்டர் வரை நடந்து சென்றுதான் நாங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். சாலை வசதி இல்லாததால் இந்த பெருந்துயர் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு சென்றாலும் இதே நிலைமை தான். இங்குள்ள பணபலம் மற்றும் அரசியல் பலம் உள்ள ஒருவரால் எங்களுக்கு வரும் சாலை வசதி தடைபட்டுள்ளது”. என அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
கொடிக்காடு மக்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் ஏற்று சாலை அமைத்து தர வேண்டும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.