நெருங்கும் தீபாவளி பண்டிகை!! கூட்ட நெரிசலை தவிர்க்க இரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொழுது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக இரயில்களில் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த வருடம் தீபாவளிப் பண்டிகை நவம்பர் மாதம் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டது.
அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, செங்கோட்டை, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களுக்கு செல்வதற்கான பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் பயணிகளின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.மேலும் அந்த சமயம் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்கவும் இரயில்களில் கூடுதலாக பெட்டிகளை இணைக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு இரயில்வே “தீபாவளிப் பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு முக்கியமான வழித்தடங்களில் சிறப்பு இரயில்கள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது.
சிறப்பு இரயில்கள் தவிர தீபாவளிப் பண்டிகையின் பொழுது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு பாண்டியன், முத்துநகர், நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி ஆகிய இரயில்களில் கூடுதலாக 2 முன்பதிவு பெட்டிகள் இணைத்து இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.