கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழத்தாழனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே மாலை 5 மணி முதல் 6 மணி வரை கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கி வாக்குப் பதிவு செய்ய அனுமதி அளித்தது.
இந்த நிலையில் 5 மணிக்கு மேல் கீழத்தாழனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு வந்த திமுகவினர் பாதுகாப்பு பணியில் இருந்த ஆய்வாளரிடம் வாக்களிக்க வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு அனுமதி அளிக்காததை அடுத்து போலீசாருடன் திமுகவினர் பள்ளி வளாகத்தின் முன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அந்தத் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத் குமார் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து அங்கு வந்த ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனுடன் அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் குவிந்துள்ளனர். இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதனைக்கண்ட திமுகவினர் சிலர் அந்த பத்திரிகையாளரின் செல்போனை பிடுங்கி அவரை தாக்கியுள்ளனர். இதைக்கண்ட போலீசார் செய்தியாளரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர். அதனையடுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினரை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். செய்தியாளரை திமுகவினர் தாக்கிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.