இவர் அவரின் உறவினரா? கிளம்பியது புது சர்ச்சை!

Photo of author

By Sakthi

பாலியல் புகாரில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் திமுகவில் ஆர் எஸ் பாரதி உறவினர் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பி எஸ் பி பி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த விவகாரம் தொடர்பான பிரச்சனைகள் பலவிதமாக உருவெடுத்து இருக்கிறது.

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கின்ற பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர் எஸ் பாரதியின் உறவினர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இதனை உண்மை என நம்பி பலரும் திமுகவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திமுகவின் வழக்கறிஞர்கள் பிரிவைச் சார்ந்த சூர்யா வெற்றி கொண்டான் அவர்கள் நேற்றைய தினம் ஒரு புகாரை அளித்தார். அதில் சென்னையில் இருக்கின்ற ஒரு பிரபலமான பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டு அவர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

அதிலும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று சொன்னால் நாராயணன் சேஷாத்ரி என்பவர் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன் என்கின்ற ஆசிரியர் திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்களுக்கு உறவினர் எனவும், அதன் காரணமாக, இந்த வழக்கை மூடி மறைத்து விடுவார்கள் எனவும், பொது இடங்களில் ஒரு சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கருத்துக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் தான் கூறுவது பொய் என தெரிந்தோ அல்லது அதன் தன்மையை குறித்து ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமலே தன்னுடைய எண்ணத்திற்கு எதிர் கருத்து உடையவர் என்ற ஒரே காரணத்திற்காக, எங்கள் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்களின் பெயரை கெடுக்கும் எண்ணத்துடன் இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

இவரை அடுத்து இன்னும் பலர் இதனை பதிவிட்டு வருவதன் காரணமாக, இது தொடர்பான அவதூறு பல தரப்பினரிடமும் பரவி வருகின்றது கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் அரசு பாரதியின் உறவினர் என்பதும் பொய் அதே போல அப்படி அவர் உறவினர் என்ற காரணத்தால் தான் தமிழக அரசு இந்த வழக்கை மூடி மறைக்க முயற்சி செய்கிறது என்பதும் பொய் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்பது மிகவும் கீழ்த்தரமான அவதூறு என்று தெரிவித்ததோடு, மேலும் எங்களுடைய ஆட்சியின் மீதும், எங்களுடைய கட்சியின் மீதும் வேண்டுமென்றே பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டு. அதோடு மக்களிடையே கட்சி மற்றும் ஆட்சியாளர்கள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்த கையாளப்படும் சதி என்று தெரிவித்திருக்கிறார்.

ஆகவே நாராயணன் சேஷாத்திரி மற்றும் அதனை பின்பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் பதிவுகள் செய்தோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பதிவுகளை உடனடியாக நீக்குவதுடன் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது