திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா? பரபரப்பான சூழ்நிலையில் நாளை திமுக செயற்குழு அவசரக் கூட்டம்
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே உரசல் ஏற்பட்டுள்ள இந்த பரபரப்பான அரசியல் சூழலில் நாளை திமுக செயற்குழு அவசரக் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னையிலுள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10 மணி அளவில் கூட்டம் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழு அவசரக் கூட்டத்தில் கூட்டணி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி, மண்டலம் வாரியாக மாநாடு நடத்துவது மற்றும் திமுகவில் கட்சியின் அமைப்பில் மாற்றம் செய்வது என்பன உள்ளிட்ட பல முக்கியமான முடிவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ள இந்த திமுக செயற்குழு அவசரக் கூட்டம் தொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்திருக்கிறார்.திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஆரம்பித்துள்ள இந்த நிலையில் மேலும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை தொடரலாமா வேண்டாமா என திமுக செயற்குழு உறுப்பினர்களின் கருத்தை அறிந்து கொள்ளும் வகையில் தான் திமுக தலைவர் ஸ்டாலின் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் கொடுப்பது பற்றியும் நாளை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில் கட்சியை பலப்படுத்தும் வகையில் மண்டல வாரியாக மாநாடுகள் நடத்துவது பற்றியும் இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல், கட்சியின் அமைப்புகளில் சில மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்தும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது குறித்தும் நாளைய தினம் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடருமா இல்லையா என்பதை இந்த செயற்குழு கூட்டம் முடிவு செய்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.