காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திமுக அறிவிப்பு
காஷ்மீர் பிரச்சனையை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 22ம் தேதி திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் டெல்லியில் ஆர்பாட்டம் நடத்த போவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் தலைவர்களை கைது செய்து, அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமல்படுத்தியுள்ளதாகவும், தலைவர்களை கைது செய்து அவர்களின் அடிப்படை உரிமையை பறித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது.
“அமைதி திரும்புகிறது” என்று, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்தி பரப்பிக் கொண்டே, கடந்த 5.8.2019 முதல் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து – தொலைத் தொடர்புகளைத் துண்டித்து – காஷ்மீரில் “அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை” செயல்படுத்திக் கொண்டிருக்கும் பாஜக அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களை 14 நாட்களுக்கு மேலாக கைது செய்து – வீட்டுக் காவலில் வைத்து – அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தையும் பறித்துள்ளது மத்திய பாஜக அரசு.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இல்லாத சூழலில், காஷ்மீர் மாநில ஆளுநரின் பரிந்துரையை ஏற்று சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்துள்ளதோடு, அடக்குமுறை, ஊரடங்கு உத்தரவு என காஷ்மீரை, இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்திவிட்டு, ‘காஷ்மீரில் சாதித்துவிட்டோம்’ என கூறிவருவது ஒருவகை அரசியலே!
ஒரு தனிப்பட்ட கட்சியின் கொள்கையை கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்றத் துடித்து – இப்போது காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக்கி விட்டது பாஜக அரசு என்பதைப் பார்க்கும் போது – இவர்களுக்கு ஜனநாயகத்திலும் நம்பிக்கையில்லை. இந்தியாவைக் கட்டிக் காப்பாற்றும் அரசியல் சட்டத்திலும் நம்பிக்கையில்லை என்பது தெளிவாகிறது.
தேசத் தந்தை மகாத்மாக காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்ற அரும்பெரும் தலைவர்கள் பிரிட்டிஷாரிடம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சர்வாதிகார நடவடிக்கைகளை மூலம் பிடுங்கிக் கொள்ள மத்தியில் உள்ள பாஜக அரசு முயற்சி செய்வதை தடுத்தே தீர வேண்டியது ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
எனவே கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரத்துத் தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி வருகின்ற 22.8.2019 அன்று காலை 11.00 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் “கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.