சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை: திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

Photo of author

By Ammasi Manickam

சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை: திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் ஈழத் தமிழர்களை மத்திய அரசு புறக்கணித்து விட்டது என்றும் அதற்கு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து துரோகம் செய்து விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனையடுத்து இதற்கு விளக்கம் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இலங்கை தமிழர்களுக்காக இரட்டை குடியுரிமையை வலியுறுத்தி வருவதாக கூறினார்.

இந்நிலையில் இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “ஆட்சியில் இல்லாவிட்டாலும் சிறுபான்மையினருக்காக உழைக்கும் கட்சியாகவும் அவர்களுக்கு அரணாகவும் திமுக உள்ளது. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு அதிமுக கூட்டணியின் 12 எம்பிக்கள் தான் காரணம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த போராட்டம் நடந்து வருகிறது. 23 ஆம் தேதி சென்னையில் திமுக நடத்தும் பேரணிக்குப் பிறகும் குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு இறங்கி வராவிட்டால் போராட்டம் மேலும் வலுப்பெறும். தமிழகம் சந்தித்திராத போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவேன் என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் இல்லாத இரட்டைக் குடியுரிமையை முதல்வர் பழனிசாமி எப்படி வலியுறுத்த முடியும்? என்றும் அவர் அப்போது கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர் இந்த சராசரி அறிவு கூட முதல்வருக்கு இல்லை என்றும், எதற்கெடுத்தாலும் ஸ்டாலின் பொய் சொல்கிறார், எதிர்க்கட்சிகள் பொய் சொல்கின்றன என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். யார் பொய் சொல்கிறார்கள்? யார் மக்களுக்காகப் போராடுகிறார்கள் என்பது விரைவில் தெரியப் போகிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அப்போது குறிப்பிட்டார்.