தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இருப்பினும் தேர்தல் களத்தில் இதுவரை யாரும் கண்ணிய குறைவான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என தமிழக மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், திமுக எம்.பி. ஆ.ராசா அதை அடித்து துவைத்து துவம்சம் செய்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து நேற்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஸ்டாலின் படிப்படியாக உயர்ந்து தற்போது நாளைய முதலமைச்சர் என்ற நிலையை அடைந்துள்ளார். அவர் முறையாக திருமணம் நடந்து 300 நாட்கள் சுமந்து பெறப்பட்ட நல்ல குழந்தை. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் குறுக்கு வழியில் பதவிக்கு வந்தவர். அதாவது கள்ள உறவில் பிறந்த குழந்தை என ஆபாசமாக பேசினார்.
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆ.ராசாவின் உருவ பொம்மை எரிப்பு, சர்ச்சை பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் என அதிமுகவினர் கடும் கோபத்தில் உள்ளனர். முதலமைச்சரின் தாயாரை அவமதிக்கும் விதமாக பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைமை மாத்திரம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. திமுகவில் இருந்து ஆ.ராசாவின் ஆபாசமான பேச்சுக்கு கனிமொழி எம்.பி. மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்’ என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் இதுபற்றி பேசியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், திமுகவின் வெற்றி மக்களால் முடிவு செய்யப்பட்டு விட்டு, எனவே தோல்வி பயத்தில் திமுகவினரின் பேச்சுக்களை திரித்து, வெட்டி, ஒட்டி வெற்றியை தடுக்கும் முயற்சி நடக்கிறது. திமுகவினர் கவனத்துடன் சொற்களைப் பயன்படுத்தவேண்டும் எனவும், பரப்புரை செய்யும்போது திமுகவின் மரபையும், மாண்பையும் மனதில் வைத்து செயல்படுங்கள் எனவும், கண்ணியக்குறைவான பேச்சுக்களை கட்சித்தலைமை ஒருபோது ஏற்காது என்றும் திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.