Tamilaga vetrik kalagam: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு திருவான்மியூரில் நேற்று காலை நடந்தது.. இந்த கூட்டத்தில் தவெக நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த பொதுக்குழுவில் இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் ஊழல், தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதி வாரிக் கணக்கெடுப்பு போன்ற 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பேசிய தவெக நிர்வாகிகள் விஜயை புகழ்ந்தும் திமுக அரசை விமர்சித்தும் பேசினார்கள்.
அதன்பின் பின் பேசிய விஜய் வழக்கம்போல் திமுகவை விமர்சித்து பேசினார். மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. பெயரை மட்டும் வீரப்பாக சொன்னால் போதாது அவர்களே. செயலிலும் காட்ட வேண்டும் அவர்களே.. அணை போட்டு ஆற்றை வேண்டுமானாலும் தடுக்கலாம்.. காற்றை தடுக்க முடியாது. மீறி தடுக்க நினைத்தால் சாதாரண காற்று சூறாவழியோ அல்லது சக்திமிக்க புயலாக மாறும்’ என பேசினார்.
மக்களை நாம் சந்தித்து குறைகளை கேட்டால் ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் தவெக கொடி தானாக பறக்கும். நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தியிருந்தால் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருக்கும். தமிழ்நாட்டின் சகோதரிகள்தான் திமுகவின் அரசியலுக்கு முடிவு கட்ட போகிறார்கள். மன்னராட்சி முடிவுக்கு வரும்’ என பேசினார். அதோடு, ‘எங்களை பார்த்து பயம் இல்லையென்றால் ஏன் நாங்கள் மக்களை சந்திப்பதை தடுக்கிறீர்கள்?’ என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், விஜய் பேசியது பற்றி திமுக அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘தவெக தலைவர் விஜய் ஒரு தவழ்கின்ற குழந்தை.. நாங்கள் பல்வேறு ஒட்டப்பந்தயங்களில் வென்றவர்கள்.. மன்னராட்சி காத்த கரங்கள்.. மக்களாட்சி காணும் எங்கள் நெஞ்சம்.. எங்களாட்சி என்றும் ஆளும். இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.. தவெகவுக்கு சிறை, போராட்டக்களம், ஆர்ப்பாட்டக்களம், பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று கூட தெரியாது’ என பதிலடி கொடுத்திருக்கிறார்.