எனது தவறை உணர்ந்து கொண்டேன் இனி அப்படி பேச மாட்டேன்! திமுகவில் தொடரும் மன்னிப்பு சம்பவங்கள்..!!
திமுகவின் மூத்த அரசியல்வாதியான ஆர்.எஸ்.பாரதி ராஜ்யசபா உறுப்பினர் திமுகவின் அமைப்புச் செயலாளராகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் பத்திரிகை, ஊடகங்களை மற்றும் பிராமணர் பற்றிய இவரின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, திமுகவுக்கு பதிலடி தரும் வகையில் பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது முகநூலில் திமுக எப்படியெல்லாம் பிராமணர்களை அண்டி பிழைத்தது என்று பல்வேறு ஆதாரங்களுடன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், ஆர்.எஸ்.பாரதியின் தரம்தாழ்ந்த அநாகரிக பேச்சுக்கு பத்திரிகையாளர் சங்கம் மன்னிப்பு கேட்க கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதோடு, ஸ்டாலின் இதுபோன்ற தவறான பேச்சுக்களை தொடர்ந்து அனுமதிக்காமல் கண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், பத்திரிகையாளர் மற்றும் ஊடகங்கள் குறித்த தனது விமர்சனத்திற்கு ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்துள்ளார். நான் சில ஊடகங்களை குறிப்பிட்டுதான் பேசினேன் எல்லோரையும் சொல்லவில்லை. இதில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை, எனது தவறை நான் உணர்ந்து கொண்டேன் இனி அப்படி பேச மாட்டேன் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். இது சம்பந்தமாக ஸ்டாலின் தன்னிடம் பேசியதாகவும் கூறினார்.
சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் நடந்த சிஏஏ சட்ட திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் ஒருவர் இறந்ததாகவும், அதற்கு மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்தத்தை அதிமுக மற்றும் பாமகவின் ஆதரித்து வாக்களித்ததே காரணம் என்றும், இதனால் அந்த மரணம் நிகழ்ந்ததாகவும் திமுகவின் எம்.பி செந்தில்குமார் டுவிட் செய்திருந்தார். பிறகு அது உறுதி செய்யாத தகவல் என்று தெரிந்த பிறகு அதற்காக டுவிட்டரில் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் அரசியல் பிரமுகர்கள் தொடர்ந்து சர்ச்சையாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்பது வாடிக்கையாகி வருகிறது.