ஜோராக நடந்த கஞ்சா விற்பனை! திமுக நிர்வாகி அதிரடி கைது!
திமுக நிர்வாகி ஒருவர் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் சில ஆண்டுகளாகவே கஞ்சா பயன்பாடு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா பழக்கத்தினால் இளைஞர்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு புகார்கள் அதிகமான நிலையில் தமிழ்நாடு காவல்துறை கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு இட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் சென்ற ஆண்டு முதல் ஆபரேஷன் கஞ்சா என்னும் அதிரடி கஞ்சா வேட்டையை தொடங்கியது தமிழக காவல்துறை. இதில் பல கஞ்சா வியாபாரிகள் மற்றும் குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து பெரும் அளவில் கஞ்சா கைப்பற்றியதோடு அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து 521 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களின் இருசக்கர நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தஞ்சா மற்றும் குட்கா வியாபாரிகளின் வங்கி கணக்கை முடக்கியதோடு அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக கஞ்சா வேட்டை 3.0 டிசம்பர் 12 முதல் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் பந்தலூர், தேவாலா, நடுக்காணி பகுதிகளில் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், பாலசுப்பிரமணியம், மற்றும் போலீசார் கிருஷ்ணமூர்த்தி, ஈஸ்வரன், அன்பு செல்வம், ஆகியோர் கொண்ட குழு போதைப் பொருட்கள் கடத்தல் மட்டும் விற்பனையை தடுக்கும் விதமாக தொடர் ஆய்வு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது தேவாலா பகுதியில் வாழவயல் சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து வந்த இருவரை போலீசார் பிடித்து தீவிரமான விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா கொண்டு செல்வது உறுதியானது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் கடுமையான விசாரணை மேற்கொண்டதில் அவர்களின் பெயர்கள் மணிராஜ் வயது 24, அன்பு ராஜ் வயது 38 எனவும், இதில் மணிராஜ் திமுக நகர இளைஞரணி துணை அமைப்பாளர் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் கேரளா மாநிலத்திலிருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து சில்லரை விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.