திருவள்ளூர்: கொரோனா பாதிப்பு தடுக்கும் விதமாக ஊரடங்கு தீவிரமாக கடைபிடித்து வரும் நிலையில் திமுக பிரமுகர் ஒருவர் தனது பிறந்தநாளில் சமூக இடைவெளி இல்லாமல் கொண்டாடி கொரோனா தொற்றை பரப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவராக குணசேகரன் இருந்து வருகிறார். திமுக பொதுக்குழு உறுப்பினரான இவர் கடந்த 19 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு இருப்பதை அறிந்தும் தனது 50 வது பிறந்தநாளை கடந்த 19 ஆம் தேதி அவரது மாந்தோப்பில் கொண்டாடியுள்ளார். இச்சம்பவத்தை அறிந்த ஆரப்பாக்கம் காவல்துறையினர் கொரோனா ஊரடங்கு காலத்தை மதிக்காமல் பிறந்தநாள் கொண்டாடிய கும்மிடிப்பூண்டி ஒன்றிய துணைக்குழு தலைவர் குணசேகரன் உட்பட 50 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட 5 அரசு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திமுக நிர்வாகியான குணசேகரன் சில வருடங்களுக்கு முன்பு செம்மரக்கடத்தல் வழக்கில் சிறைக்கு சென்றவர் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் ஊரடங்கு நேரத்தில் பிறந்தநாள் கொண்டாடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.