
தமிழகத்தில் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசியல் சூழலில் பரபரப்பான நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்து, திமுகவை குறிவைத்து சுடச்சுட பேசியுள்ளார்.
செய்தியாளர்கள் மத்தியில் அண்ணாமலை கூறியதாவது:
“திமுகவுக்கு வரும் தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது. அதிகபட்சமாக 20 தொகுதிகளில் தான் அவர்கள் வெற்றிபெற முடியும். மக்கள் மனதில் திமுக ஆட்சி மீதான வெறுப்பு உருவாகியுள்ளது. அவர்கள் மீண்டும் ஆட்சி பெறக்கூடாது என்ற எண்ணம் பொதுமக்களில் தெளிவாக தெரிகிறது.”
அதனைத் தொடர்ந்து, திமுக எடுத்த கருத்துக் கணிப்பு (Survey) பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
“20 இடங்களிலும் வெற்றிபெறும் அளவுக்கே இருக்கிற கட்சி சர்வே எதற்காக எடுக்கிறது? மக்கள் உணர்வுகள் மாற்றம் அடைந்துள்ளன. திமுகவின் தோல்வி இந்த முறை உறுதி.” என அவர் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் சகோதரர் மற்றும் விஜய் குறித்து பதில்
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் சகோதரர் சத்தியநாராயணராவ், விஜய் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், அண்ணாமலை புத்திசாலி என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது
“ரஜினியின் சகோதரர் என்னுடைய திறமையை பாராட்டினாலும், விஜய் குறித்து அவர் கூறிய கருத்துகள் அவருக்கே உரியது. விஜய் ஒரு கட்சி தொடங்கி உள்ளார். அவர் களத்திற்கு வந்து உழைத்தால் அதனால் கிடைக்கும் வெற்றி வாய்ப்பு அல்லது தோல்வி அவருடையதே” என்று குறிப்பிட்டார்.
திமுக கூட்டணியில் பிளவு
அண்ணாமலை, தேசிய ஜனநாயக கூட்டணியை (NDA) வலுப்படுத்தும் நோக்கத்தில் பேசினார்.
“தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என்பதே மக்கள் விருப்பம். புதிய கட்சிகள் வரவேண்டும், ஒவ்வொரு கூட்டணியும் தெளிவாக ஒரு வடிவம் பெறவேண்டும். திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் விரைவில் விலகும் சூழ்நிலை உருவாகும்.”
TNPSC தேர்வில் பாடத்திட்ட மீறல் குற்றச்சாட்டு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருத்து தெரிவித்த அண்ணாமலை கூறியதாவது:
“TNPSC தேர்வில் பல கேள்விகள் பாடத்திட்டத்துக்கு வெளியே கேட்கப்பட்டுள்ளன. இது மாணவர்களின் திறனை சோதிக்கும் நேர்மையான முறையாக இல்லை. இளைஞர்களின் கனவுகளை சிதைக்கும் செயலாக இது இருக்கிறது.”என்று கூறினார்.
தமிழக அரசியல் அரங்கில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அண்ணாமலையின் கூற்றுகள், தேர்தல் முன் அரசியல் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கின்றன. திமுக வெற்றி பெறும் தொகுதிகள் வெறும் 20 என்று நேரடியாக குற்றம்சாட்டியுள்ள அவர், விஜய், ரஜினி, TNPSC, மற்றும் கூட்டணிக் விவகாரங்களை ஒட்டுமொத்தமாக தீவிரமாக விமர்சித்துள்ளார்.